எந்திரம் பழுதால் அரவை பணி பாதிப்பு; விவசாயிகள் முற்றுகை
எந்திரம் பழுதால் அரவை பணி பாதிக்கப்பட்டதையடுத்து, ஆலையை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் உள்ள தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான பெரம்பலூர் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 2021-22-ம் ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள 3 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் ஆலையில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டதால் அரவை பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால், ஆலைக்கு கொண்டு வந்த கரும்புகள் அரவை செய்யப்படாமல், ஆலைக்கு எதிரே வாகனங்களிலேயே உள்ளதால், அந்த வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. அரவைக்கு கொண்டு வந்த கரும்பு வெயிலில் காய்ந்து எடை குறைவு ஏற்படும் என்பதால் கரும்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் கரும்பு விவசாயிகள் எந்திரக் கோளாறை சரி செய்து தொடர்ந்து இயக்க வலியுறுத்தி எறையூர் சர்க்கரை ஆலை வாயில் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மேலும் பெரம்பலூர் சர்க்கரை ஆலை அனைத்துக் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகிக்கு நேற்று அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், கடந்த 4 நாட்களாக ஆலையில் ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக வெட்டிய கரும்புகள் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் விவசாயிகள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வெட்டிய கரும்புகளை அருகிலுள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பி வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று அதில் கூறப்பட்டிருந்தது.