அரசு ஊழியரின் வாரிசாக 2-வது மனைவியை ஏற்க முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

முதல் மனைவி சம்மதத்துடன் 2-வது திருமணம் செய்தாலும் அரசு ஊழியரின் சட்டப்பூர்வ வாரிசாக 2-வது மனைவியை ஏற்க முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-02-25 20:04 GMT
மதுரை, 

முதல் மனைவி சம்மதத்துடன் 2-வது திருமணம் செய்தாலும் அரசு ஊழியரின் சட்டப்பூர்வ வாரிசாக 2-வது மனைவியை ஏற்க முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அரசு ஊழியர் 2-வது திருமணம்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் முத்துமாடசாமி. இவர் கல்வித்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து கடந்த 2013-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இவரது முதல் மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 1985-ம் ஆண்டில் திருமணம் நடந்தது.
சில வருடங்களில் தமிழ்ச்செல்வி ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது சகோதரி கவிதாவை, 1994-ம் ஆண்டு முத்துமாடசாமி 2-வதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 ஆண்டுகள் கழித்து தமிழ்ச்செல்வி இறந்துவிட்டார்.
இந்தநிலையில் 2-வது மனைவி கவிதாவுக்கு குடும்ப பென்ஷன் கிடைக்கும் வகையில் பணிப்பதிவேட்டில் அவரை தனது சட்டப்பூர்வ வாரிசாக பதிவு செய்யும்படி முத்துமாடசாமி மனு அளித்தார்.

நடத்தை விதிமீறல்

அவரது மனு கடந்த டிசம்பர் மாதம் நிராகரிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, தனது 2-வது மனைவியை சட்டப்பூர்வ வாரிசாக குறிப்பிட வேண்டும் என உத்தரவிடும்படி முத்துமாடசாமி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:- அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்துகொள்ள முடியாது. இது நடத்தை விதிமீறல் மட்டும் அல்ல. தண்டனைக்கு உரிய குற்றமாகும். மனுதாரர் 2-வது திருமணம் செய்தது குறித்து புகார்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் மனுதாரர் தன்னுடைய முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே 2-வது திருமணம் செய்துள்ளார்.

ஏற்க முடியாது

இதற்காக மனுதாரர் பணியில் இருக்கும்போதே அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். . முதல் மனைவி சம்மதத்துடன் 2-வது திருமணம் செய்து கொண்டதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். ஆனாலும் அவர் 2-வது திருமணம் செய்தது சட்டவிரோதம்தான். அதனால் அரசு ஊழியர்களின் பணப்பலன்களை பெற 2-வது மனைவிக்கு உரிமை கிடையாது. மனுதாரர் 2-வது மனைவியை பணிப்பதிவேட்டில் சட்டப்பூர்வ வாரிசாக நியமிக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.    இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்