உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கிறோம் நாகர்கோவில் மாணவர் பரபரப்பு தகவல்

போர் எதிரொலியாக உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கிறோம் என்று நாகர்கோவில் மாணவர் கிருத்திக் ரோஷன் கூறினார்.;

Update: 2022-02-25 18:27 GMT
நாகர்கோவில்:
போர் எதிரொலியாக உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கிறோம் என்று நாகர்கோவில் மாணவர் கிருத்திக் ரோஷன் கூறினார்.
உக்ரைன் மீது போர்
உக்ரைன் மீது அதன் அண்டை நாடான ரஷியா போர் தொடுத்துள்ளது. எங்கு பார்த்தாலும் குண்டு மழைகள் பொழிவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்படி அசாதாரண சூழல் நிலவி வரும் உக்ரைனில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் உள்பட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுவாக குமரி மாவட்ட மக்கள் வேலை மற்றும் கல்விக்காக வெளிநாடு செல்வதை வாடிக்கையாக கொண்டவர்கள் ஆவர். அந்த வகையில் தற்போது போர் நடந்து வரும் உக்ரைனில் உள்ள கார்கோ நேஷனல் என்ற மருத்துவக்கல்லூரியில் நாகர்கோவில் வடசேரி தாணுமாலயன் தெருவை சேர்ந்த கேசவ பெருமாள் என்பவருடைய மகன் கிருத்திக் ரோஷன் (வயது 19), மருமகன் விவேக் ஆதித்யா(19) மற்றும் குளச்சல், மார்த்தாண்டம், ராஜாவூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 21 மாணவர்கள் தங்கி மருத்துவம் படித்து வருவது தெரியவந்துள்ளது. அவர்கள் தங்களது பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தங்களின் நிலைமை பற்றியும், அங்கு அரங்கேறும் தாக்குதல்கள் பற்றியும் கூறி வருகிறார்கள்.
உரிய நடவடிக்கை
அந்த வகையில் உக்ரைனில் படித்து வரும் கிருத்திக் ரோஷன் அவருடைய தந்தை கேசவ பெருமாளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறோம் என்ற தகவலை கூறியுள்ளார். இதுபற்றி கேசவ பெருமாளிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
என் மகனும், மருமகனும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் மருத்துவ படிப்புக்காக உக்ரைன் சென்றார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் போர் மூண்டதால் கல்லூரியில் இருந்து அவர்களால் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் என் மகன் கூறினான். ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முடியவில்லை என்றும், எந்த நேரமும் அச்சத்துடனேயே இருப்பதாகவும் தெரிவித்தான். அதே நேரத்தில் என் மகன் மற்றும் அவனுடன் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறினான். அவர்களை கல்லூரி நிர்வாகம் வெளியே செல்ல விடாமல் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உள்ளது. எனினும் போர் உச்சத்தை அடையும் தருவாயில் அனைவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாணவர்களை தாயகம் மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் 200 மாணவர்கள்
குமரி மாவட்டத்தில் இருந்து 21 மாணவர்கள் மட்டும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் உக்ரைனில் தவித்து வரும் தகவல் முதலில் வெளியானது. ஆனால் குமரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் சுமார் 200 மாணவர்கள் உக்ரைனில் உள்ள பல கல்லூரிகளில் படித்து வருவது தற்போது தெரிய வந்துள்ளது. எனவே மாணவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்