பெண் கவுன்சிலர் வீட்டுமுன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்தாமரைகுளத்தில் பெண் கவுன்சிலர் வீட்டுமுன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்தாமரைகுளம்:
தென்தாமரைகுளத்தில் பெண் கவுன்சிலர் வீட்டுமுன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் கவுன்சிலர்
தென்தாமரைகுளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் தி.மு.க. 3 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். அதே போல் பா.ஜனதா 4 இடங்களிலும், அ.தி.மு.க. 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
இதில் தி.மு.க. மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் கூட்டணி அமைத்ததால் அவர்களின் பலம் 7 ஆனது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் இணையவில்லை. அதே சமயம் பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்து பலத்தை 7 ஆக உயர்த்தின. பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற இன்னும் ஒரு கவுன்சிலர் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் கவுன்சிலரிடம் இரு அணியினரும் பேசி வந்தனர்.
திடீர் மாயம்
இந்த நிலையில் காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகா திடீரென்று மாயமானார். அவருடைய வீடும் பூட்டியிருந்தது. அவருடைய உறவினர்களும் வீட்டில் இல்லை. இதனால் அவர் மாற்று கட்சிக்கு ஆதரவா? என்ற சந்தேகம் அடைந்த தி.மு.க. கூட்டணியினர் செல்போன் மூலம் அவரை தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
அவர் மாயமாகி விட்டதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் கூறினர். தி.மு.க. கூட்டணியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு திடீரென்று மாயமானதால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர்.
ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் நேற்று மாலை அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் தென்தாமரைகுளத்தில் உள்ள காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகா வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். கொட்டாரம் நகர தலைவர் அரிகிருஷ்ணபெருமாள் முன்னிலை வகித்தார்.
இதில் கலந்து கொண்டவர்கள் காணவில்லை...காணவில்லை... காங்கிரஸ் கவுன்சிலரை காணவில்லை என்றும், திருப்பிக்கொடு... திருப்பிக்கொடு...பதவியை திருப்பிக்கொடு என்றும் கோஷம் எழுப்பினர். இதில் கரூம்பாட்டூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் அய்யாப்பழம், சாமிதோப்பு ஊராட்சி காங்கிரஸ் தலைவர் பாலமுருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாக்கிய செல்வம் மற்றும் ஸ்ரீராமன், டேனியல், பால்ராஜ் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.