நாட்டுத்துப்பாக்கியுடன் சென்ற 2 பேர் கைது
கொடைரோடு அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கியுடன் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
திண்டுக்கல்:
கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் போலீஸ் ஏட்டுகள் பிரகாஷ், சக்திவேல் ஆகியோர் சோழவந்தான் பிரிவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது அங்கு பள்ளப்பட்டி ஊராட்சி வேலாயுதபுரம் அண்ணாநகரை சேர்ந்த வீரணன் (வயது 36) கையில் நாட்டுத்துப்பாக்கியுடன் சென்றார். அவருடன் சிறுமலை குரங்கு பள்ளத்தை சேர்ந்த பாண்டியும் (34) சென்றார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் வேட்டையாட சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியும், 7 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.