சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை
அடிப்படை வசதியில்லாத சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டனா்;
சின்னசேலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கீழ்குப்பம் போலீஸ் நிலையம் அருகே சேலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி கட்டணம் வசூல் செய்துள்ளனர்.
அப்போது அடிப்படை வசதியில்லாமல் சுங்கச்சாவடியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த கீழ்குப்பம் போலீசார் மற்றும் சின்னசேலம் தாசில்தார் அனந்தசயனன் விரைந்து வந்தனர். பின்னர் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படாமல் கட்டணம் வசூல் செய்யப்படுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின்பேரில், அடிப்படை வசதி இல்லாத சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.