பழனி மாணவர்கள் பாதாள அறையில் பதுங்கல்
உக்ரைன் நாட்டில் போர் தீவிரம் அடைந்து இருப்பதால் பழனியைச் சேர்ந்த மாணவர்கள் பாதாள அறையில் பதுங்கி இருக்கின்றனர். அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களும், அவர்களது பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி:
உக்ரைன் மீது போர்
ரஷிய ராணுவம் உக்ரைன் மீது போர் தொடுத்து அந்த நாட்டின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதில் பலர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் அங்கு தங்கி மருத்துவ படிப்பு பயின்று வருகின்றனர்.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியை சேர்ந்த 7 மாணவர்கள் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் தங்கி மருத்துவம் படித்து வருவது தெரிய வந்து உள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-
பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி பங்கஜம். இவர் தனியார் வங்கியில் அலுவலராக உள்ளார். இவர்களது 2-வது மகன் ஹரீஷ் (23). இவரும், நெய்க்காரப்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் செல்வம் மகன் அருண் (23) என்பவரும் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள மருத்துவ கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இதில் ஹரீசின் பெற்றோர் கூறுகையில், எங்களது மகனிடம் நேற்று காலையில் செல்போனில் பேசினோம். அப்போது இந்திய தூதரக அலுவலகம் அருகில் பாதாள அறையில் பாதுகாப்பாக உள்ளேன். இங்கு போர் தீவிரம் அடைந்துள்ளதால் எப்படியாவது இந்தியா வர விரும்புவதாக தெரிவித்தார். எனவே மத்திய, மாநில அரசுகள் உக்ரைனில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளை மீட்டு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மாணவி வீடியோ பதிவு
இதேபோல் பழனி அருகே அழகாபுரியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் கோவையில் வேளாண் துறையில் பணியாற்றுகிறார். இவரது மனைவி பிரபாவதி. இவர் பழனி அருகே பெரியம்மாபட்டியில் பள்ளி தலைமை ஆசிரியையாக உள்ளார். இவர்களது மகள் மவுனிகா (24). கீவ்வில் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
அவர் தனது செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ ஒன்றை பதிவு செய்து பெற்றோருக்கு அனுப்பி இருந்தார். அதில் உக்ரைனில் கடந்த ஒரு வாரமாக போர் தீவிரம் அடைந்திருப்பதால், நாங்கள் கீவ் அருகே உள்ள ஒரு நகரில் தஞ்சம் அடைந்துள்ளோம். இங்கு பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனாலும் இந்த நிலை எப்போது வரை நீடிக்கும் என்று தெரியாததால் மிகுந்த பயத்தில் உள்ளோம். எனவே எங்களை எப்படியாவது இந்தியாவுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதாள அறையில் தஞ்சம்
பழனியை சேர்ந்த பாண்டியராஜ் மகன் ராகுல்கண்ணன் (23). இவர் கீவ்வில் மருத்துவ கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார். நெய்க்காரப்பட்டி ஆர்.ஜி.நகரை சேர்ந்த உதயக்குமார் மகள் ஷேலே (19). இவர் முதலாம் ஆண்டு மருத்துவம் படிக்கின்றார். மேலும் காவலப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மகன் மிதுன் (20).
இவர் கீவ் நகரில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகின்றார். நெய்க்காரப்பட்டி பாலகுரு மகன் ராஜ்சந்தர். இவரும் அங்கு 4-ம் ஆண்டு மருத்துவம் படிக்கிறார். ஆயக்குடியை சேர்ந்த மகுடீஸ்வரன் மகன் நிரஞ்சன். இவர் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவர்கள் அனைவரும் பாதாள அறையில் பதுங்கி இருப்பதாக அவர்களது பெற்றோர் உருக்கமாக தெரிவித்தனர்.