பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

சீர்காழி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-25 17:47 GMT
சீர்காழி:
சீர்காழி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பட்டா மாறுதல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன்(வயது 37). இவர், சீர்காழி அருகே உள்ள செம்பதனிருப்பு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். 
சீர்காழி அருகே உள்ள அல்லிவிளாகம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ்(57) என்பவர் தனக்கு சொந்தமான இடத்திற்கு பட்டா மாறுதல் தொடர்பாக நேற்று முன்தினம் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளார். 
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
நேற்று கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாதன், பட்டா மாறுதல் செய்ய வேண்டுமானால் தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டுமென  செல்வராஜிடம் கேட்டுள்ளார். 
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வராஜ், நாகப்பட்டினத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். 
கையும், களவுமாக பிடிபட்டார்
இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை செல்வராஜிடம் கொடுத்து அந்த பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு கூறினர். அதன்படி செல்வராஜ் நேற்று மதியம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். அங்கு கிராம நிர்வாக அலுவலர் இல்லாததால் அவரை போனில் தொடர்பு கொண்டு செல்வராஜ் பேசினார்.
அப்போது பட்டா மாறுதலுக்கு நீங்கள் கேட்ட ரூ. 5 ஆயிரத்தை கொண்டு வந்துள்ளேன். அந்த பணத்தை எங்கு வந்து தரவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாதன், தனது வீட்டிற்கு வந்து தருமாறு கூறி உள்ளார். அதன்படி செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாதன் வீட்டிற்கு சென்று பணத்தை அவரிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக செந்தில்நாதனை பிடித்தனர். 
கைது
இதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாதனை சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செந்தில்நாதனை கைது செய்து நாகப்பட்டினம் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர். 
கைது செய்யப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாதன் தனது தந்தை கிருஷ்ணமூர்த்தி பணியில் இருந்தபோது இறந்ததால் வாரிசு அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்