விவசாயி அடித்துக் கொலை
திருவெண்ணெய்நல்லூர் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அண்டராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்ராசு (வயது 57), விவசாயி. இவர் அதே ஊரில் உள்ள ஆதிநாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார்.
ஏற்கனவே அந்த நிலத்தில் டி.புதுப்பாளையத்தை சேர்ந்த கணேசன் மகன் முருகன்(37) என்பவர் 10 ஆண்டுகளாக பயிர் செய்து வந்துள்ளார். ஆனால் அவர் குத்தகை பணம் கொடுக்காததால், சின்ராசுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் சின்ராசு சாகுபடி செய்திருந்த சவுக்கு கன்றுகளை நேற்று மாலை 4 மணி அளவில் முருகன் பிடுங்கி நாசம் செய்துள்ளார். இதை பார்த்த சின்ராசு, அவரை தட்டிக்கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகன் உருட்டுக் கட்டையால் சின்ராசுவின் தலையில் அடித்து தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி அறிந்த விழுப்புரம் டி.எஸ்.பி. இருதயராஜ், திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பலியான சின்ராசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சின்ராசுவை கொலை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் முருகன், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.