எங்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

‘நாங்கள் உணவின்றி தவித்து வருகிறோம்’, எங்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் வேளாங்கண்ணி மாணவி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2022-02-25 17:38 GMT
நாகப்பட்டினம்:
‘நாங்கள் உணவின்றி தவித்து வருகிறோம்’, எங்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் வேளாங்கண்ணி மாணவி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வேளாங்கண்ணி மாணவி
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதையொட்டி உக்ரைனில் படிக்கச்சென்ற இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு சிக்கி கொண்டுள்ளனர். 
இவர்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்காரத்தெருவை சேர்ந்த ஜான்பிரிட்டோ என்பவரது மகள் வின்சியாவும் ஒருவர் ஆவார். உக்ரைனில் டாக்டருக்கு படித்து வரும் மாணவி வின்சியா உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உணவின்றி தவித்து வருவதாக...
அந்த வீடியோவில் மாணவி வின்சியா, ரஷியா தொடுத்துள்ள போரினால் உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும், சுரங்கங்கள், பதுங்கு குழிகளில் பாதுகாப்பற்ற முறையில் தங்கி இருப்பதாகவும், உணவு இன்றி தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடும் பனியில் நின்று வீடியோ வெளியிட்டுள்ள அவர், தான் தங்கி இருக்கும் பகுதியில் 8 ஆயிரம் இந்திய மாணவர்களும், உக்ரைன் நாடு முழுவதும் 20 ஆயிரம் இந்திய மாணவர்களும் சிக்கி உள்ளதாகவும், அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
சமூக வலைதளத்தில் வைரலாகிறது
இந்த வீடியோவை பார்த்த மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாணவியின் தந்தை ஜான் பிரிட்டோ கூறுகையில், ‘‘உக்ரைனில் படித்து வரும் எனது மகள் உள்ளிட்ட அனைவரையும் பத்திரமாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
படிக்க சென்ற மாணவர்கள் உணவு மற்றும் தங்கும் இடமின்றி சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுடைய நிலையை அறிந்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மேலும் செய்திகள்