வேலூர் பகுதியில் நடந்த மாடு விடும் விழாவில் காளைகள் முட்டியதில் 25 பேர் காயம்

வல்லண்டராமம், ஆற்காட்டான் குடிசை, வேப்பங்கநேரி கிராமங்களில் நடந்த மாடு விடும் விழாவில் காளைகள் முட்டியதில் 25 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-02-25 17:35 GMT
அணைக்கட்டு

வல்லண்டராமம், ஆற்காட்டான் குடிசை, வேப்பங்கநேரி கிராமங்களில் நடந்த மாடு விடும் விழாவில் காளைகள் முட்டியதில் 25 பேர் காயம் அடைந்தனர்.

 மாடு விடும் விழா

அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் கிராமத்தில் மாடு விடும் விழா நேற்று நடந்தது. கலால் உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சைனலதாமணி, துணைத்தலைவர் பிரீத்தி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அணைக்கட்டு தொகுதி நந்தகுமார் எம்.எல்.ஏ. மற்றும் அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 148 காளைகள் பங்கேற்றன.
காளைகள் ஓடியபோது வாலிபர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர். பொதுமக்கள் மாடி வீடுகளின் மீது குடை பிடித்தப்படி அமர்ந்து காளைகள் ஓடுவதை வேடிக்கை பார்த்தனர். 

சீறிப் பாய்ந்து ஓடிய காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். ஒருவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல் பரிசாக ரூ.50,001, இரண்டாவது பரிசாக ரூ.40,001 உள்ளிட்ட 41 பரிசுகள் வழங்கப்பட்டன. 

ஆற்காட்டான் குடிசை

இதேபோல அடுக்கம்பாறை அருகே உள்ள ஆற்காட்டான்குடிசை கிராமத்தில் நடந்த மாடு விடும் விழாவுக்கு வேலூர் தாசில்தார் செந்தில் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் குமார், வருவாய் ஆய்வாளர் சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ரீனா வரவேற்றார். அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 53 காளைகள் பங்கேற்றன.

விழாவில் மாடுகள் முட்டியதில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கேயே மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் இளைஞர்கள் செய்தனர்.

 வேப்பங்கநேரி

கே.வி.குப்பத்தை அடுத்த வேப்பங்கநேரி கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் 105 மாடுகள் கலந்துகொண்டன. வாடிவாசலில் இருந்து மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக விடப்பட்டன. பார்வையாளர்கள் வீடுகள், மாடிகள், மரங்களின் மீது அமர்ந்தபடி மாடு விடும் விழாவை ரசித்தனர்.

மாடுகள் ஓடும் போது பாதையின் குறுக்கே நின்றபடி இ்ளைஞர்கள் உற்சாகப்படுத்தினர். மாடுகள் முட்டியதில் 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில், 2 பேர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 4 மாடுகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

துணை கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் சரண்யா, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மற்றும் வருவாய்த்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்தனர். 
ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராமத்தினர்  செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்