குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மான் பிடிபட்டது
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மான் பிடிபட்டது
அனுப்பர்பாளையம்
திருப்பூர் மாவட்டம் தெக்கலூரை அடுத்த கோதபாளையம் காட்டுப்பகுதியில் நூற்றுக்கணக்கான மான்கள் வசித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக மான்கள் தாகத்திற்கு தண்ணீர் தேடி திருப்பூர் மாநகர குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதும், மான்களை தெருநாய்கள் கடித்து காயமடைவதுடன், உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் அருகே பொன்னுலிங்கம் என்பவரின் தோட்டத்திற்கு ஒரு மான் வந்தது. இதை கண்ட அவர் அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்கு மான் தப்பி செல்லாத வகையில் தடுத்து வைத்திருந்தார். மேலும் இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மானை பத்திரமாக மீட்டனர். பின்னர் வனத்துறை அதிகாரிகளிடம் மான் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.