ஜவுளி ஏற்றுமதியாளரிடம் ரூ.64 லட்சம் மோசடி
தங்க வியாபாரி எனக்கூறி ஜவுளி ஏற்றுமதியாளரிடம் ரூ.64 லட்சம் மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்
புகார்
கரூர் வெண்ணைமலை பகுதியில் உள்ள வேலவன் நகரைச் சேர்ந்தவர் சில்வர்ஸ்டார்(வயது 34). தொழிலதிபரான இவர் ஜவுளி நிறுவனம் நடத்தி ஏற்றுமதி செய்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய செல்போனில் தொடர்பு கொண்ட நபர் தனது பெயர் ஏஞ்சலா என்றும், தான் ஹாங்காங்கை சேர்ந்தவர் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டதாகவும், அந்த நபர் தான் ஒரு தங்க ஆய்வாளர் எனவும், மேலும் தங்க வியாபாரம் செய்து வருவதாகவும் சில்வர் ஸ்டாரிடம் தெரிவித்துள்ளார்.
மோசடி
மேலும் அது குறித்தான வியாபார ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். இதன்காரணமாக சில்வர்ஸ்டார் கடந்த 12.5.2021 முதல் 11.11.21 வரை பேடிஎம் மூலம் ரூ.64 லட்சத்து 81 ஆயிரத்து 846-ஐ அனுப்பியுள்ளார். ஒருகட்டத்தில் சில்வர்ஸ்டார் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
இதனை அடுத்து இது குறித்து கரூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி வழக்குப்பதிவு செய்து ஏஞ்சலா என்பவர் யார்? அவர் உண்மையில் ஹாங்காங் நாட்டை சேர்ந்தவர்தானா? தங்க வியாபாரம் செய்து வருவது உண்மைதானா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.