காயத்தால் அவதிப்பட்ட சிறுத்தைக்கு அமராவதி வனத்துறை விடுதியில் சிகிச்சை
காயத்தால் அவதிப்பட்ட சிறுத்தைக்கு அமராவதி வனத்துறை விடுதியில் சிகிச்சை
தளி
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்தில் காயத்தால் அவதிப்பட்ட சிறுத்தைக்கு அமராவதி வனத்துறை விடுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுத்தைக்கு காயம்
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகம் பண்ணப்பட்டி, கோம்பை பகுதியில் சிறுத்தை ஒன்று பின்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில நாட்களாக உடல் பலவீனமடைந்து நடமாட முடியாமல் அவதிப்பட்டு வந்தது.
இதை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் கண்டுபிடித்ததுடன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிப்பதற்கு வனத்துறையினர் முடிவு செய்தனர்.
மருத்துவர்கள் சிகிச்சை
இதையடுத்து உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் இருந்து மருத்துவ குழுவினருடன் சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர். பின்னர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி வனத்துறை விடுதிக்கு சிறுத்தையை கொண்டு வந்தனர்.
முதுமலை மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து வந்த வனத்துறை மருத்துவர்களான ராஜேஷ், சதாசிவம் ஆகியோர் சிறுத்தைக்கு சிகிச்சை அளித்ததுடன் அதன் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பிடிபட்ட சிறுத்தைக்கு மருந்து மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. உடல்நிலை தேறியவுடன் அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்த ஆண் சிறுத்தைக்கு 5 வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.