அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாலிபருக்கு முழங்காலில் நுண்துளையிட்டு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினருக்கு பாராட்டு

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாலிபருக்கு முழங்காலில் நுண்துளையிட்டு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினருக்கு பாராட்டு;

Update: 2022-02-25 16:27 GMT
திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாலிபருக்கு முழங்காலில் நுண்துளையிட்டு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
ஜவ்வு கிழிந்தது
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் அருளரசன் (வயது 21). இவர் கல்லூரி படிப்பை முடித்து போலீஸ் தேர்வுக்காக வேலூரில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில் அவருடைய வலது முழங்காலில் அடிபட்டு வலி அதிகமானது. ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் உயர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார்.
அவருக்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், எலும்பு மூட்டு ஜவ்வு கிழிந்திருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக நவீன முறையில் நுண்துளையிட்டு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன், எலும்பு மூட்டு பிரிவு துறைத்தலைவர் குமார் வழிகாட்டுதலில், டாக்டர்கள் சுந்தரமூர்த்தி, கதிரேசன், பவித்ரா, மயக்கவியல் துறை தலைவர் பூங்குழலி ஆகியோர் அடங்கிய குழுவினர் 2 மணி நேர அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர். அருளரசன் தற்போது நலமாக உள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்ற நிலையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அருளரசன் தனக்கு சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
நுண்துளையிட்டு அறுவை சிகிச்சை
இதுகுறித்து எலும்பு மூட்டு பிரிவு துறை தலைவர் குமார் கூறும்போது, ‘அருளரசனுக்கு பயிற்சியின்போது வலது முழங்கால் இரு எலும்புகளுக்கு இடையே இருந்த ஏ.சி.எல். என்ற ஜவ்வு கிழிந்து விட்டது. காலின் வேறு பகுதியில் இருந்து சதை எடுத்து புதிய ஜவ்வு ஆத்ராஸ்கோபி மூலம் நுண்துளையிட்டு பொருத்தப்பட்டுள்ளது. வழக்கமான அறுவை சிகிச்சை செய்தால் 5 சென்டி மீட்டர் நீளம் வரை மூட்டுப்பகுதியை அறுத்து பின்னர் தையல் போட வேண்டும். இயல்பு நிலைக்கு வர ஓராண்டாகும். தற்போது மேற்கொண்ட நவீன சிகிச்சையால் விரைந்து குணமாகிவிட்டார். ஓய்வுக்கு பிறகு அவர் பயிற்சி மேற்கொள்ள முடியும்’ என்றார்.
கல்லூரி டீன் முருகேசன் கூறும்போது, ‘திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன கருவிகள் மற்றும் சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளது. இந்த மருத்துவமனையில் முதன்முறையாக செய்யப்பட்ட நவீன அறுவை சிகிச்சை இதுவாகும். இதனால் உயர் சிகிச்சைக்கு கோவை, மதுரை, சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை இனி ஏற்படாது. இங்கேயே சிகிச்சை மேற்கொள்ளலாம்’ என்றார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்