சிவசேனா கவுன்சிலர் வீட்டில் வருமான வரி சோதனை
சிவசேனா கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.;
மும்பை,
சிவசேனா கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
மாநகராட்சி நிலைக்குழு தலைவர்
மும்பை மாநகராட்சி சிவசேனா கவுன்சிலர் யஷ்வந்த் ஜாதவ். இவர் மாநகராட்சி நிலைக்குழு தலைவராக இருந்து வருகிறார். இவர் தான் மாநகராட்சியின் அனைத்து பெரிய திட்டங்களுக்கும் இறுதி ஒப்புதல் அளிக்க வேண்டும். இவரது மனைவி யாமினி ஜாதவ் பைகுல்லா தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
யாமினி ஜாதவ் 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுவில் ரூ.1 கோடி கடன் இருப்பதாக கூறியிருந்தார். அவர் கடன் வாங்கியதாக கூறிய நிறுவனம், கொல்கத்தாவை சேர்ந்த போலி நிறுவனம் என்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் அந்த போலி நிறுவனம் ஹவாலா ஆபரேட்டர் எனவும் கூறப்படுகிறது.
அதிரடி சோதனை
இந்தநிலையில் நேற்று அதிகாலை வருமான வரித்துறை அதிகாரிகள் யஷ்வந்த் ஜாதவின் வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அவர்கள் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை தங்களுடன் அழைத்து வந்து இருந்தனர். இதேபோல அவர்கள் சில மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த புதன்கிழமை தான் மராட்டிய மந்திரி நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் மும்பை மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், நிலைக்குழு தலைவரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
---------------