கலெக்டர் அலுவலகம் முன்பு மனைவி, குழந்தைகளுடன் தொழிலாளி தர்ணா

வீட்டை அபகரிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனைவி, குழந்தைகளுடன் தொழிலாளி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-02-25 14:15 GMT
வீட்டை அபகரிக்க முயற்சி

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 30). தொழிலாளி. இவருக்கு அமுதா(27) என்ற மனைவியும் சரவணன்(8), குமரன்(5) என்ற 2 மகன்களும், சரண்யா(4), சத்யா(3) என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கார்த்திக்கின் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அவரது வீட்டை அபகரிக்க முயற்சி செய்து அவரிடம் சண்டையிட்டு வந்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட கார்த்திக் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதியன்று இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து சிலர் அவரது வீட்டை சுற்றிலும் பள்ளம் தோண்டி வைத்ததாக கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் கார்த்திக் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் அளிக்க வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தின் உள்ளே சென்ற அவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கார்த்திக் பிளேடை எடுத்து தனது இடது பக்க கையில் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதில் அவரது கையில் ரத்தம் கொட்டியது. இதைக் கண்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கார்த்திக் ரத்தத்தோடு சொட்ட சொட்ட நின்றதைக் கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்து அவரை தடுத்து கையிலிருந்த பிளேடை பறித்துக் கொண்டனர்.

வாக்குவாதம்

ஆவேசம் குறையாத கார்த்திக் தனது வீட்டை அபகரிக்க முயற்சி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் இங்கேயே தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருவழியாக போலீசார் அவரை சமாதானப்படுத்தினர்.

பின்னர் கார்த்திகையும் அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளையும் போலீஸ் வேனில் ஏற்றி திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து போலீசார் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளே செல்பவர்களை தீவிர பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்