திருவொற்றியூரில் கட்டிடத்தொழிலாளி அடித்துக்கொலை

திருவொற்றியூரில் கட்டிடத்தொழிலாளியை கல்லால் அடித்துக்கொலை செய்துவிட்டு, உடலை தண்டவாளத்தில் வீசிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-02-25 14:07 GMT
கட்டிடத் தொழிலாளி

திருவொற்றியூர் கார்கில் நகர் சபிபுல்லா தெருவில் வசித்து வந்தார் சீனிவாசன் (வயது 21). கட்டிடத்தொழிலாளியான இவர் மீது சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

சீனிவாசன், நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வீட்டில் இருந்து அழைத்துச்சென்றனர். அதன்பிறகு சீனிவாசன் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை திருவொற்றியூர் சடையங்குப்பம் பாட்டை அருகே உள்ள தண்டவாளம் அருகே சீனிவாசன் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு ஆஸ்பத்திரி‌க்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அடித்துக்கொலை

தண்டவாளம் அருகே கிடந்த சீனிவாசனின் உடல் அருகில் கல் மற்றும் சிமெண்டு ஓடுகளில் ரத்தக்கறைகள் காணப்பட்டது. எனவே மர்ம நபர்கள் சீனிவாசனை அழைத்துச் சென்று கல்லால் அடித்துக்கொலை செய்து விட்டு, அவரது உடலை தண்டவாளத்தில் வீசி சென்று உள்ளனர். அந்த வழியாக வந்த ரெயில்கள் அவரது உடல் மீது ஏறி சென்றதால் உடல் துண்டாகி கிடந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் சீனிவாசனை அடித்துக்கொலை செய்து விட்டு உடலை தண்டவாளத்தில் வீசிவிட்டு தப்பிச்சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. சீனிவாசனை வீட்டில் இருந்து அழைத்துச் சென்றவர்கள் யார்? சீனிவாசனுக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்