14 சண்டை கோழிகளை விஷம் வைத்து கொன்ற விவசாயி
ஜோலார்பேட்டை அருகே 14 சண்டை கோழிகளை விஷம் வைத்து கொன்ற விவசாயி
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ராமரெட்டியூர் பகுதியில் உள்ள பொட்டிக்கான் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 53).
இவர் விவசாயம் செய்வதுடன் கால்நடைகள், கோழிகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார்.
14 சண்டை கோழிகளையும் வளர்த்து வந்தார். இந்த கோழிகளை காலையில் 6 மணிக்கு திறந்துவிடுவார். இரவு 8 மணி அளவில் கூண்டில் அடைப்பார்.
வழக்கம்போல சம்பவத்தன்று பிரகாஷ் தான் வளர்த்து வந்த சண்டை கோழிகளை மேய்ச்சலுக்கு திறந்து விட்டுள்ளார்.
அப்போது கோழிகள் இவரது நிலத்தின் பக்கத்து நிலத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.
இரவு 8 மணி அளவில் கோழிகளை பிரகாஷ் தேடிச்சென்றுள்ளார். அப்போது பக்கத்து நிலத்தில் சில கோழிகள் இறந்து கிடந்தன. சில கோழிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. அவைகளும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டன.
பக்கத்து நிலத்தை சேர்ந்த விவசாயி அரிசியில் விஷம்கலந்து வைத்து கோழிகளை கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் பக்கத்து நிலத்தின் உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நிலத்தின் உரிமையாளர் உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள் என கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.