வாலாஜாபாத் ஊராட்சியில் மீன் பிடி குத்தகையை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரக்கோரி தர்ணா
வாலாஜாபாத் ஊராட்சியில் மீன் பிடி குத்தகையை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கோரி தர்ணா போராட்டம் நடந்தது.
மீன் பிடி குத்தகை
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள மிக பெரிய ஏரி பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியின் மூலம் 1,800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாய தொழில் செய்து விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஊத்துக்காடு ஏரியில் மீன்வளத்துறை சார்பில் மீன்பிடிப்பு குத்தகை ஏலம் நடத்தப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு மீன்வளத்துறை சார்பில் வேலையில்லா பட்டதாரிகள் மூலம் ஒருங்கிணைந்த கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி அதன் மூலம் மீன் வளர்ப்பில் ஈடுபட அரசு தீர்மானித்தது.
அந்த வகையில் மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்ட மீன்வளத்துறை குழுவின் பரிந்துரையை ஏற்று ஊத்துக்காடு ஏரியில் மீன் பிடி குத்தகையை மீன்வளத்துறையினர் கூட்டுறவு சங்கத்தின் பெயரில் தனி நபருக்கு வழங்கி உள்ளனர். கடந்த இரு பருவ மழையின் காரணமாக ஏரி முழுவதும் நிரம்பிய காரணத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பயிர் செய்துவரும் நிலையில் மீன்பிடித்ததாக கூறி ஏரிநீரை வெளியேற்றுவதாகவும், மதகு கரைகளை சேதப்படுத்தி வருவதாகவும், மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் ஏரி மீன் பிடிப்பு குத்தகை மூலம் ஊராட்சிமன்ற நிர்வாகத்திற்கு வருமானம் எதுவும் வருவதில்லை என கூறி கிராம மக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
தர்ணா போராட்டம்
இந்த நிலையில் ஊத்துக்காடு ஏரியில் மீன்பிடி குத்தகையை பொது ஏலத்தில் நடத்த வேண்டும், மீன்வளத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரியை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் பல முறை சம்பந்தப்பட்ட துறைகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது. இந்த நிலையில் மீன்வளத்துறை கட்டுப்பாட்டிலுள்ள மீன்பிடிப்பு குத்தகை ஏலத்தை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும், மீன்பிடிப்பு குத்தகையை பொது ஏலத்தில் நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊத்துக்காடு ஊராட்சி மன்ற
தலைவர் சாவித்திரி மணிகண்டன் தலைமையில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து போலீசாரும், பொதுப்பணித்துறை இளம் பொறியாளர் மார்க்கண்டேயன், ஊராட்சி மன்ற நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் கலைந்து சென்றனர். மேலும் கிராம மக்கள் பலர் வேலை இல்லாதபோது தனிநபர் ஒருவர் முறைகேடாக மீன்வளத்துறையின் மூலம் மீன் பிடி குத்தகையை பெற்றுள்ளதாகவும், பெரிய அளவிலான படகுகளை கொண்டு ஏரிக்கரைகளை சேதப்படுத்தி வருவதாகவும், மீன் வளர்ப்புக்காக கழிவுகளை ஏரியில் கொட்டி அசுத்தப்படுத்துவதாகவும் இதைத் தவிர்க்கவே மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித் துறை அதிகாரிகளிடமும் ஊத்துக்காடு ஏரியை மீண்டும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைப்பதாக ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.