நெல்லையில் ‘வலிமை’ படம் வெளியான தியேட்டரில் குவிந்த அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி-பரபரப்பு
நெல்லையில் ‘வலிமை’ படம் வெளியான தியேட்டரில் குவிந்த அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
நெல்லை:
நெல்லையில் ‘வலிமை’ படம் வெளியான தியேட்டரில் குவிந்த அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
‘வலிமை’ திரைப்படம்
நடிகர் அஜித்குமார் நடித்த ‘வலிமை’ திரைப்படம் நேற்று வெளியானது. நெல்லை மாநகரில் 5 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டு உள்ளது. அந்த தியேட்டர்களில் அஜித் ரசிகர்கள் கட்-அவுட்கள் வைத்து அலங்கரித்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் ஏராளமான ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் இருந்தனர்.
ரசிகர்கள் திரண்டனர்
இதையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தியேட்டரில் அதிகாலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் தியேட்டர் முன்பு மேளம் அடித்து ஆடினார்கள். இதற்கு ஏற்கனவே போலீசார் தடை விதித்து இருந்தனர்.
இதனால் அங்கு நின்ற போலீசார் நடனம் ஆடிய ரசிகர்களை தியேட்டர் வளாகத்தை விட்டு வெளியேற்றினர். குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகே தியேட்டருக்குள் செல்ல வேண்டும் என கூறினர்.
தடியடி
இதனால் தியேட்டருக்கு வெளியே கூட்டமாக ரசிகர்கள் நின்றிருந்தனர். ஒரு சிலர் மோட்டார் சைக்கிள்களில் அங்குமிங்கும் சென்று சாகசங்கள் செய்தவாறு சுற்றி வந்தனர். இதையடுத்து ரசிகர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
இதேபோல் டவுன், பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் தியேட்டர்களிலும் அஜித் ரசிகர்கள் திரண்டனர். போலீசார் அங்கும் கட்டுப்பாடுகளை விதித்து ரசிகர்களை கட்டுப்படுத்தினார்கள். இதனால் ஒருசில இடங்களில் போலீசாரிடம் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.