வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 4 பேருக்கு தலா ரூ.5,500 அபராதம்
வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 4 பேருக்கு தலா ரூ.5,500 அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
பெரம்பலூர்:
கொலை மிரட்டல்
பெரம்பலூரை அடுத்த எறையசமுத்திரம் கிராமத்தில் உள்ள கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜா(வயது 38). இவர் கடந்த 2020-ம் ஆண்டு தனது நிலத்தில் சோளம் பயிரிட்டிருந்தார். இவரது நிலத்திற்கு அருகே நீர்வழிப்பாதை உள்ளது. ராஜா தனது காட்டில் சோளம் விதைப்பதற்காக நீர்வழிப்பாதை வழியே கடந்த 26.8.2020 அன்று டிராக்டரில் சென்றார். அவருடன் அவரது சகோதரர் மற்றும் தொழிலாளர்கள் 2 பேர் சென்றனர்.
அப்போது அதே ஊரை சேர்ந்த மணிகண்டன்(27), கிருஷ்ணன்(45), ஆனந்த்கிருஷ்ணன்(42) மற்றும் கோவிந்தசாமி(52) ஆகிய 4 பேரும் சேர்ந்து டிராக்டரை வழிமறித்து, அந்த வழியாக செல்ல உரிமையில்லை என்று கூறி, சாதியை இழிவுபடுத்தும் வகையில் ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
அபராதம்
இதுகுறித்து மருவத்தூர் போலீசில் ராஜா புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் கண்ணன் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் துணை சூப்பிரண்டு ஜவகர்லால் விசாரணை நடத்தினார். மேலும் இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் மணிகண்டன், கிருஷ்ணன், ஆனந்த்கிருஷ்ணன், கோவிந்தசாமி ஆகிய 4 பேருக்கும் இந்திய தண்டனை சட்டம் 341 பிரிவின் கீழ் தலா ரூ.500 அபராதமும், அதனை கட்ட தவறினால் ஒருமாதத்திற்கு சிறை தண்டனையும், இந்திய தண்டனை சட்டம் 506 (2) -ன்கீழ் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அதனை செலுத்த தவறினால் 6 மாதங்களுக்கு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.