தமிழகத்தில் இருந்து மருத்துவ படிப்புக்கு சென்ற 300 பேர் பாதாள அறையில் தஞ்சம்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் 300-க்கும் மேற்பட்ட தமிழக மருத்துவ மாணவர்கள் பாதாள அறையில் தஞ்சம் புகுந்துள்ளனர். தங்களை அரசு உடனடியாக மீட்க வேண்டும் என்று தினத்தந்திக்கு பேட்டி அளித்தனர்.

Update: 2022-02-24 21:33 GMT
மதுரை, 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் 300-க்கும் மேற்பட்ட தமிழக மருத்துவ மாணவர்கள் பாதாள அறையில் தஞ்சம் புகுந்துள்ளனர். தங்களை அரசு உடனடியாக மீட்க வேண்டும் என்று தினத்தந்திக்கு பேட்டி அளித்தனர்.

வான்வழித்தாக்குதல்

உக்ரைனில் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் குறைவு என்பதால் இந்திய மாணவர்கள் அங்கு எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு அதிகளவில் செல்கின்றனர். அங்குள்ள மருத்துவ கல்லூரிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தாக்குதல் நடத்த போவதாக தகவல் பரவியது. அதனால் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு கேட்டு கொண்டது. மேலும் அந்த நாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானங்களும் இயக்கப்பட்டன.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் உக்ரைன் மீது ரஷியா வான்வழித்தாக்குதலை தொடங்கி உள்ளது. இந்த தாக்குதலால் உக்ரைனில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே உக்ரைனில் உள்ள விமான தளங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் அந்த நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்டு வருவது தடைப்பட்டு போய் உள்ளது.

தமிழக மாணவர்கள்

உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் உள்ள கார்கிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகம், வி.என்.கரசின் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அதிகமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவ கல்லூரியில் விடுதியில் உள்ள பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்து இருக்கின்றனர்.
இது குறித்து சென்னை மாணவி ஜெனனி, மதுரை மாணவர் விகாஷ் ஆகியோர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-
தமிழகத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அருகே, அருகே உள்ள 3 மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகிறோம். இங்கு போர் பதற்றம் ஏற்பட்டவுடன் உடனடியாக இந்தியா திரும்புவதற்கு கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டோம். ஆனால் ஆன்லைன் வகுப்பு எதுவும் நடத்த மாட்டோம். நீங்கள் இங்கிருந்து சென்றால் உங்கள் படிப்பு பாதிக்கும். போர் எல்லாம் வராது. எனவே இங்கேயே தங்கி இருங்கள் என்று கூறினர். அதனால் நாங்களும் வேறுவழியின்றி கல்லூரியில் தங்கி இருந்தோம். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி கல்லூரி நிர்வாகத்தினர் நீங்கள் உடனடியாக உங்கள் நாடு திரும்புங்கள் என்று கூறினர். உடனே விமான டிக்கெட் புக் செய்தோம். வருகிற 7-ந் தேதிக்கு மேல் தான் டிக்கெட் கிடைத்தது. அதுவும் ஒரு டிக்கெட் விலை ரூ.90 ஆயிரம். இருந்தாலும் டிக்கெட் முன் பதிவு செய்து வைத்திருக்கிறோம்.

பிரட் உணவு

இந்த நிலையில் ரஷியா திடீரென்று தாக்குதலை தொடங்கி விட்டது. எங்கள் கல்லூரிக்கு மிக அருகில் குண்டுகள் வந்து விழுந்தன. இரவு முழுவதும் குண்டு சத்தம் கேட்டு கொண்டே இருக்கிறது. அதனால் அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறோம். தற்போது கல்லூரி நிர்வாகத்தினர், எங்களை கல்லூரி விடுதியில் உள்ள பாதாள அறையில் தங்க வைத்து உள்ளனர். இந்த ஒரு அறையில் சுமார் 350 பேர் தங்கி இருக்கிறோம். அருகே உள்ள மற்ற விடுதி பாதாள அறைகளிலும் ஏராளமான மாணவர்கள் தங்கி இருக்கின்றனர்.
எங்களுக்கு உணவும் எதுவும் தரவில்லை. இன்று (நேற்று) காலையில் உணவு வாங்குவதற்கு வெளியே சென்று வருமாறு கூறினர். ஆனால் வெளியே எந்த உணவும் கிடைக்கவில்லை. வெறும் பிரட் மட்டுமே கிடைத்தது. அதனை வாங்கி வந்து 3 வேளையும் சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம். எங்களை உடனடியாக மீட்பதற்கு மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்