வீடுகளுக்குள் புகுந்து 6 பேரை சரமாரியாக வெட்டிய கும்பல்

மேலூர் அருகே 2 வீடுகளுக்குள் புகுந்து 6 பேரை சரமாரியாக கும்பல் வெட்டியது. இது தொடர்பாக 11 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் போலீசில் சிக்கினர்.;

Update: 2022-02-24 21:23 GMT
மேலூர், 

மேலூர் அருகே 2 வீடுகளுக்குள் புகுந்து 6 பேரை சரமாரியாக கும்பல் வெட்டியது. இது தொடர்பாக 11 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் போலீசில் சிக்கினர்.

பணத்தை திருப்பி கேட்டதால் தகராறு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாத்தமங்கலம் நடுப்பட்டியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40). இவரிடம் பக்கத்து ஊரான சாத்தமங்கலத்தை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு கடனாக ரூ.2 லட்சம் வாங்கி உள்ளார். அந்த பணத்தை பார்த்திபன் பலமுறை கேட்டும் திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது.
 இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அருண்பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் பார்த்திபன் வீட்டிற்கு சென்று உள்ளார்.

6 பேருக்கு அரிவாள் வெட்டு

அங்கு வீட்டில் இருந்த பார்த்திபன், அவரது மனைவி பரமேஸ்வரி, பார்த்திபனின் தந்தை மாரிமுத்து, தாயார் ராஜேஸ்வரி ஆகியோரை அரிவாளால் வெட்டியும் உருட்டு கட்டையாலும் தாக்கினார்கள். பின்னர் பார்த்திபனின் நண்பர் பாண்டி வீட்டிற்குள்ளும் சென்று. அங்கிருந்த பாண்டி, அவரது மகன் யோேகஸ்வரன் ஆகியோரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் காயம் அடைந்த அவர்கள் 6 பேரும் மதுரையில் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

6 பேர் கைது

 இதுகுறித்த புகாரின் பேரில் அருண்பாண்டியன் உள்பட 11 பேர் மீது கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். 
அதன்படி மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், கீழவளவு இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் பத்மநாதன் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் நடுப்பட்டியை சேர்ந்த பவித்ரன் (வயது 23), இளையராஜா (45), சுந்தரேசன் (19), மீனாட்சிபுரம் உதிஸ்குமார் (26 ), சாத்தமங்கலம் ஹரீஷ் (19), தனியாமங்கலம் முத்துப்பாண்டி (23) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்