வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்

வங்கிகளை தனியார்மயம் ஆக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-02-24 21:05 GMT
பெங்களூரு:

  பிரதமர் மோடிக்கு கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நாட்டுடமை ஆக்கினார்

  மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளாக பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டது. மத்திய அரசின் வருவாயை அதிகரிப்பதிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வங்கிகளில் மத்திய அரசின் முதலீடுகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் வங்கிகள் தனியார் மயமாக்கப்படுகின்றன. இது அபாயகரமான நடவடிக்கை. இதனால் நாட்டில் ஆதங்கம் ஏற்பட்டுள்ளது.

  1969-ம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனியார் வங்கிகளை நாட்டுடமை ஆக்கினார். தனியார் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்படும் மக்களை காப்பதில் வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன.

டெபாசிட் பணம்

  வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதால் விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு எளிதாக கடன் கிடைத்தது. சிறு வங்கிகள் இணைக்கப்பட்டதால் தேசிய வங்கிகளின் எண்ணிக்கை 27-ல் இருந்து 12 ஆக குறைந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் தொடங்கப்பட்ட 4 வங்கிகள் தங்களின் அடையாளத்தை இழந்தன. பொதுமக்களின் டெபாசிட் பணத்தை தனியாருக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லாமல் வழங்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இது நாட்டு மக்களை மத்திய அரசு ஏமாற்றும் செயல் ஆகும்.

  நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரை புறக்கணிப்பது, சமூக கொள்கைக்கு எதிராக செயல்படுவது, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிராக இருப்பது மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நாசப்படுத்துவது போன்றவற்றால் வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
  இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்