6,129 அடி உயர மலையில் ஏறி பெங்களூரு மூதாட்டி அசத்தல்

சாதிப்பதற்கு வயது தடை இல்லை என்பதற்கு ஒரு உதாரணமாக 6,129 அடி உயர மலையில் மலையேற்றம் மேற்கொண்டு பெங்களூருவை சேர்ந்த 62 வயது மூதாட்டி சாதனை படைத்து உள்ளார்.

Update: 2022-02-24 21:00 GMT
பெங்களூரு:

62 வயது மூதாட்டி

  பரபரப்பாக நகரும் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு விஷயத்தில் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு சிலருக்கு குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தாலும், வயதை காரணம் காட்டி அதில் இருந்து ஒதுங்கி கொள்கிறார்கள்.

  ஆனாலும் ஒரு சிலர் சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்றும் நிரூபித்து வருகின்றனர். இந்த நிலையில் 62 வயது மூதாட்டி ஒருவர் 6,129 அடி உயர மலையில் ஏறி சாதனையை நிகழ்த்தி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

  கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள அனுமந்தநகர் பகுதியில் வசித்து வருபவர் நாகரத்னம்மா (வயது 62). இளம்வயதில் மலையேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு மலைகளில் ஏறியுள்ளார். இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் பிள்ளைகள், கணவரை கவனிக்கும் பொருட்டு அவர் மலையேற்றம் செல்வதை தவிர்த்து வந்தார். கடைசியாக தனது 22 வயதில் நாகரத்னம்மா மலையேற்றம் சென்று இருந்தார். அதன் பின்னர் அவர் மலையேற்றம் செல்லவில்லை.

அகஸ்தியர் மலை

  இந்த நிலையில் மகன், மகளுக்கு திருமணம் முடிந்து விட்டதாலும், கணவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாலும் மீண்டும் மலையேற்றத்தில் ஈடுபட நாகரத்னம்மா விரும்பினார். இதுகுறித்து அவர் தனது மகனான சிவக்குமார் என்பவரிடம் தெரிவித்து இருந்தார். தாயின் ஆசையை நிறைவேற்ற சிவக்குமாரும் விரும்பினார். இந்த நிலையில் அண்டை மாநிலங்களான கேரளா-தமிழ்நாடு எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 6,129 அடி உயர அகஸ்தியர் மலையில் மலையேற்றம் செய்ய நாகரத்னம்மா முடிவு செய்தார்.

  இதையடுத்து மகன் சிவக்குமாருடன் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரெயில் மூலம் சென்று இருந்தார். இதன்பின்னர் அகஸ்தியர் மலையில் மலையேற்றம் மேற்கொள்ள இருந்த 13 பேர் குழுவுடன், நாகரத்னம்மாவும் இணைந்து கொண்டார். அவரை மற்றவர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர்.

பாராட்டுக்கள்

  ஆனாலும் மூதாட்டி என்பதால் நாகரத்னம்மா மலையேறி விடுவாரா என்று வனத்துறையினர் யோசனையில் ஆழ்ந்தனர். ஆனால் அவர்களின் யோசனை தவறு என்பதை நிரூபிக்கும் விதமாக இளைஞர்களுக்கு போட்டியாக நாகரத்னம்மா வேகமாக மலையேறினார். மலை உச்சிக்கு சென்ற அவர் குழந்தையை போல துள்ளி குதித்தார். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் நாகரத்னம்மா புடவை கட்டி கொண்டு மலையேறி உள்ளார்.

  இதனை வனத்துறை அதிகாரி ஒருவர் வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ பார்த்த பலரும் நாகரத்னம்மாவை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

பயணம் தொடரும்

  இதுகுறித்து நாகரத்னம்மா கூறும்போது, எனக்கு மலையேற்றம் ஏறுவதில் அதிக ஆர்வம் உண்டு. ஆனால் கணவர், மகன், மகளை கவனிக்கும் பொருட்டு கடந்த 4 தசாப்தங்கள் அதாவது 40 ஆண்டுகள் மலையேற்றம் செல்லவில்லை.

  40 ஆண்டுகள் கழித்து மலையேற்றம் சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் நாட்களிலும் எனது மலையேற்ற பயணம் தொடரும் என்றார். அவரது லட்சிய பயணம் ெதாடர நாமும் வாழ்த்துவோம்!

மேலும் செய்திகள்