ஓமலூர் அருகே தனியார் கல்குவாரியில் பயங்கரம்: இரவு காவலாளி வெட்டிக்கொலை அண்ணன் மகனிடம் போலீசார் தீவிர விசாரணை
ஓமலூர் அருகே, தனியார் கல்குவாரியில் இரவு காவலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது அண்ணன் மகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓமலூர்,
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
காவலாளி வெட்டிக்கொலை
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உம்பிளிக்கம்பட்டி பகுதியில் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த நாராயணன் என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இவரது கல்குவாரியில் நடுப்பட்டியை சேர்ந்த சேகர் (வயது 45) என்பவர் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் பகல் நேரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு கல்குவாரி பகுதியிலேயே ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு இரவில் கல்குவாரி காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் கல்குவாரி வேலைக்கு சென்ற பணியாளர்கள் அங்கு ரத்த வெள்ளத்தில் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
உடனே அவர்கள் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, செல்வம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதனிடையே இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள்.
கொலையான சேகரின் பின்னந்தலை மற்றும் இடது கண் பகுதியில் வெட்டுக்காயம் இருந்ததை அடுத்து அவர் கொலையாளியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
மோப்பநாய் கவ்விப்பிடித்தது
இதையடுத்து அந்த குவாரியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் பார்வையிட்டனர். இதில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் பதிவான காட்சியில், கொலை செய்யப்பட்ட சேகரின் அண்ணன் அண்ணாதுரையின் மகன் அண்ணாமலை (30) அந்த பகுதியை கடந்து செல்வது தெரியவந்தது.
இதுஒருபுறம் இருக்க, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய், சேகரின் உடலை மோப்பம் பிடித்து விட்டு கல்குவாரி பகுதியில் அங்கும், இங்குமாக ஓடியது. ஒரு கட்டத்தில் அந்த மோப்ப நாய் கல்குவாரி அலுவலகத்தின் பின்புறம் இருந்த சேகரின் அண்ணன் மகன் அண்ணாமலையின் இடத்திற்கு சென்று அவரை கவ்விப்பிடித்தது. இதையடுத்து அண்ணாமலையை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதத்தில்...
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அண்ணாமலை நடுப்பட்டி காக்காயன்காடு பகுதியில் வசித்து வருவதாகவும், அவர் அந்த கல்குவாரிக்கு மேற்கு பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து ஆடுகள் வளர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆடுகள் வளர்ப்பு அல்லது ேவறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக அண்ணாமலை, தனது சித்தப்பா சேகரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இரவு காவலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஓமலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.