அடுத்த பாரா ஒலிம்பிக் போட்டியில் 2 மீட்டர் உயரம் தாண்ட இலக்கு சேலம் வீரர் மாரியப்பன் தங்கவேலு தகவல்

அடுத்த பாரா ஒலிம்பிக் போட்டியில் 2 மீட்டர் உயரம் தாண்ட இலக்கு நிர்ணயித்து உள்ளேன் என்று சேலம் வீரர் மாரியப்பன் தங்கவேலு கூறினார்.

Update: 2022-02-24 20:55 GMT
சேலம், 
கலந்துரையாடல்
விளையாட்டு போட்டிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மாணவ, மாணவிளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறது. இதன்ஒருபகுதியாக சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று சேலம் அழகாபுரத்தில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜூலி ஜோசப் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
ஆர்வம் ஏற்படும்
பின்னர் மாரியப்பன் தங்கவேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்று இந்தியா திரும்பிய போது பிரதமர் மோடி, ஒலிம்பிக் வீரர்கள் கிராமப்புற மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதன்படி இது போன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாணவர்கள் மத்தியில் பேசுவதன் மூலம் அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் ஏற்படும்.
2 மீட்டர் உயரம் தாண்ட இலக்கு
கடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 19 பதக்கங்களை பெற்றது. வரும் காலங்களில் 100 பதக்கங்களுக்கு மேல் வாங்க வேண்டும். அடுத்த பாரா ஒலிம்பிக் போட்டியில் 2 மீட்டர் உயரம் தாண்ட இலக்கு நிர்ணயித்து பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். 
சேலத்தில் விரைவில் அகாடமி தொடங்கி, அதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் விளையாட்டு துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து உள்ளன. சேலத்தில் விரைவில் ‘சிந்தடிக்' விளையாட்டு மைதானம் அமையும். 
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்