வாழப்பாடி அருகே தனியார் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து
வாழப்பாடி அருகே தனியார் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
வாழப்பாடி
நூற்பாலையில் தீ
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி எம்.பெருமாபாளையம் பகுதியில் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று இரவு 8 மணி அளவில் பஞ்சு பண்டல் செய்யும் எந்திரத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென்று பரவிய தீ அந்த குடோனில் இருந்த அனைத்து பஞ்சுகளிலும் பற்றியது.
அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர். இந்த விபத்தில் பீகார் பகுதியை சேர்ந்த சுசில்குமார் (வயது 26) என்ற வாலிபர் தீக்காயமடைந்தார். உடன் இருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டனர்.
இந்த பயங்கர தீ விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.
3 மணி நேரமாக தவித்த தொழிலாளி
அப்போது காயமடைந்தவர்களை மீட்க 108 ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால் நூற்பாலை நிர்வாகத்தினர் யாருக்கும் காயம் எதுவும் இல்லை என ஆம்புலன்சை திருப்பி அனுப்பினர். ஆனால் காயமடைந்த தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்காமல் நூற்பாலை நிர்வாகத்தினர் தனியறையில் படுக்க வைத்து 3 மணி நேரமாக சிகிச்சைக்கு அனுப்பாமல் மெத்தனமாக இருந்ததாக வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாழப்பாடி போலீசார் தனியார் நூற்பாலை நிர்வாகத்தினரை எச்சரித்து சுசில்குமாரை உடனடியாக மின்னாம்பள்ளியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இரவில் தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை பார்க்கும் நூற்பாலையில் தீக்காயமடைந்த நபருக்கு சிகிச்சை அளிக்காமல் எதுவுமே நடக்க வில்லை என போலீசாரிடம் மறைத்த தனியார் நூற்பாலை நிர்வாகத்தை போலீசார் கண்டித்த சம்பவம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.