ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்; பெங்களூருவில் 2 ‘ஸ்ட்ரோக்’ ஆட்டோக்களுக்கு தடை - கர்நாடக அரசு உத்தரவு
பெங்களூருவில் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து 2 ‘ஸ்ட்ரோக்’ என்ஜின் கொண்ட ஆட்டோக்களை இயக்க தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.;
பெங்களூரு:
2 ‘ஸ்ட்ரோக்’ ஆட்டோக்களுக்கு தடை
பெங்களூரு நகரில் காற்று மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக அதிக புகையை வெளியிடும் வாகனங்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதுபோல், பெங்களூரு 2 ‘ஸ்ட்ரோக்’ என்ஜின்களை கொண்ட ஆட்டோக்களால் காற்று, சுற்றுச்சூழல் மாசுபடுவதால், அதற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்திருந்தது.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக 2 ‘ஸ்ட்ரோக்’ என்ஜின்களை கொண்ட ஆட்டோக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் பெங்களூருவில் 2 ‘ஸ்ட்ரோக்’ என்ஜின் ஆட்டோக்கள் இயக்குவதற்கு தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து 2 ‘ஸ்ட்ரோக்’ ஆட்டோக்களுக்கு எப்.சி. செய்ய கூடாது என்று போக்குவரத்து துறைக்கும், அரசு உத்தரவிட்டுள்ளது.
10 ஆயிரம் பேர் பாதிப்பு
ஏப்ரல் 1-ந்தேதிக்கு பிறகு 2 ‘ஸ்ட்ரோக்’ என்ஜின் ஆட்டோக்கள் இயக்கப்பட்டால், டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. கொரோனாவுக்கு முன்பாகவே 4 ‘ஸ்ட்ரோக்’ என்ஜின் ஆட்டோக்களை வாங்கும்படி அரசு உத்தரவிட்டு இருந்தது. அத்துடன் 2 ‘ஸ்ட்ரோக்’ என்ஜின் ஆட்டோக்களை, 4 ‘ஸ்ட்ரோக்’ என்ஜின் மாற்றுவதற்காக ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
தற்போது 2 ‘ஸ்ட்ரோக்’ என்ஜின் ஆட்டோக்கள் பெங்களூருவில் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.