பெண்ணிடம் வழிப்பறி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை

கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் வழிப்பறி திருடனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-02-24 20:48 GMT
திருச்சி
திருச்சி அருகே உள்ள துவாக்குடி தெற்கு மலைப்பகுதி, பழைய கருப்புக்கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி சம்பு (வயது 47). இவர், கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ந் தேதி காலை துவாக்குடி கருப்புக்கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி (36) திடீரென சம்புவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, ‘தங்க நகையை கழற்றி கொடுக்காவிட்டால் குத்தி கொலை செய்து விடுவேன்’ என்று மிரட்டினார். இதனால், பயந்துபோன சம்பு, தனது காதில் அணிந்திருந்த தங்கத்தோடு, மாடல் ஜிமிக்கி ஆகியவற்றை கழற்ற, அதனை கந்தசாமி பறித்துக் கொண்டு தப்பிஓடி விட்டார்.
7 ஆண்டு சிறை தண்டனை
 இதுகுறித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழிப்பறி வழக்கு தொடர்பான விசாரணை திருச்சி முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி சாந்தி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. கந்தசாமி மீதான வழிப்பறி குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில், வக்கீல் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்