வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை

கணவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால் வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பான உருக்கமான கடிதமும் சிக்கியது.

Update: 2022-02-24 20:47 GMT
சிக்கமகளூரு:

வயதான தம்பதி

  சிக்கமகளூரு டவுனில் விஜயாப்புரா ஆதிபூத்தப்பா கோவில் பகுதியில் வசித்து வந்தவர், பசவராஜ் (வயது 80). இவரது மனைவி லட்சுமம்மா (72). பசவராஜ் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

  இந்த தம்பதிக்கு 5 மகள்கள் உள்ளனர். 5 பேரும் திருமணம் முடிந்து வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பசவராஜூக்கு கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நாளுக்கு நாள் உடல்நலம் மோசமாகி வந்துள்ளது.

விஷம் குடித்து தற்கொலை

  இதனால் விரக்தி அடைந்த பசவராஜ் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். தான் தற்கொலை செய்தால் மனைவி தனியாக அவதிப்படுவாளே என அவர் எண்ணினார். இதனால் லட்சுமம்மாவிடம் தனது முடிவை கூறி, இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்வோம் என்றார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

  அதன்படி நேற்று முன்தினம் இரவு பசவராஜும், லட்சுமம்மாவும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் இருவரும் இருக்கையில் அமர்ந்தபடியே பிணமாக கிடந்தனர். நேற்று காலை வெகுநேரமாகியும் வீட்டில் பசவராஜ்-லட்சுமம்மா நடமாட்டம் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்றுள்ளனர்.

போலீஸ் விசாரணை

  அப்போது தான் வயதான தம்பதி இருவரும் தற்கொலை செய்த சம்பவம் வெளியே தெரியவந்தது. மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் பசவராஜ்-லட்சுமம்மாவின் மகள்கள் விரைந்து வந்து பெற்றோரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

  சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பசவனஹள்ளி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பு பசவராஜ் எழுதிவைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

உருக்கமான கடிதம்

  அந்த கடிதத்தில், எனக்கு உடல் நிலை சரியில்லாததால் எனக்கு வாழ்க்கை துணையாக வந்த எனது மனைவியும், நானும் ஒன்றாக தற்கொலை செய்துகொள்கிறோம். எங்களது சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை என்று கூறியிருந்தனர்.

  மேலும், மகள்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், நீங்கள் அனைவரும் நன்றாக வாழ வேண்டும். தாங்கள் வசித்து வந்த வீட்டை 5 பேரும் பிரச்சினை இன்றி பாகம் பிரித்துக்கொண்டு வாழ வேண்டும் என்று உருக்கமா குறிப்பிட்டு இருந்தார்.

பெரும் சோகம்

  இதுகுறித்து பசவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ஒரே நாளில் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்