குறைப்பிரசவத்தில் பிறந்த சிசு, தாய் சாவு
குறைப்பிரசவத்தில் பிறந்த சிசு, தாய் உயிரிழந்தனர
திருவெறும்பூர்
திருவெறும்பூர் அருகே பழங்கனாங்குடி சாலையில் உள்ள ராமானுஜம் தெருவை சேர்ந்தவர் திருமாவளவன் (வயது 40). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி கவிமணி(37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கவிமணி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கட்டில் கவிமணி மீது இடித்ததாக தெரிகிறது. இதனால் கவிமணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே குறைப்பிரசவத்தில் பெண் குழந்தை(சிசு) பிறந்து இறந்துள்ளது.
இதையடுத்து திருமாவளவன் மற்றும் கவிமணி ஆகியோர் சிசுவின் உடலை தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள கொள்ளையில் புதைத்துள்ளனர். இதையடுத்து திருமாவளவன், கவிமணியிடம் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று கூறியதாகவும், ஆனால் அதற்கு அவர் வேண்டாம் என்று கூறியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. இதையடுத்து திருமாவளவன், 108 ஆம்புலன்ஸ் மூலம் கவிமணியை அருகே உள்ள துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கவிமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.