ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்- இன்ஸ்பெக்டர் இடையே வாக்குவாதம்

போலீசாரை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும்-சங்க நிர்வாகிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-24 20:21 GMT
ஒரத்தநாடு:-

போலீசாரை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும்-சங்க நிர்வாகிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு போலீசார் பாதிக்கப்பட்டவர்கள் மீதே, பொய்வழக்கு போட்டு குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி போலீசாரை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று காலை பாப்பாநாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் அறிவழகன், தஞ்சை மாவட்ட செயலாளர் அருளரசன், மாவட்ட தலைவர் ஏசுராஜா, ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் பெர்னாட்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்று இருந்தனர்.

கடும் வாக்குவாதம்

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, போலீஸ் நடவடிக்கையினை குற்றம்சாட்டியும், போலீசாரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட செயலாளர் அருளரசன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சங்க நிர்வாகிகளிடம், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாகவும், இதனால் தொடர்புடையவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க போவதாக கூறினார்.  இதற்கு சங்க நிர்வாகிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால் இன்ஸ்பெக்டருக்கும், சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேர சலசலப்புக்கு பிறகு ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடந்தது. 

மேலும் செய்திகள்