திருடிய மாட்டை கொண்டு செல்ல சரக்கு வாகனத்தை திருடியவர் கைது
திருடிய மாட்டை கொண்டு செல்ல சரக்கு வாகனத்தை திருடிய திருடன்
சிவகாசி
சிவகாசி காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் பசுமாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று நேற்று காலை மேய்ச்சலுக்கு விட்டபோது காணாமல் போனது. இது குறித்து ஆரோக்கிய ராஜ் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதே போல் திருத்தங்கல் ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். என்பவருக்கு சொந்தமான சரக்கு வாகனம் காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் சிவகாசி-நாரணாபுரம்புதூர் ரோட்டில் போலீசார் வாகன தணிக்கை செய்தபோது சாலையோரம் பசுமாட்டுடன் சரக்கு வாகனம் ஒன்று நின்றது. இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்த சிவகாசி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த வேல்முருகன்(வயது 28) என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது சரக்கு வாகனத்தையும், அதில் இருந்த பசுமாட்டையும் அவர், போஸ்காலனியை சேர்ந்த செல்வத்தின் உதவியுடன் திருடியது தெரியவந்தது. வாகனத்தில் போதிய டீசல் இல்லாததால் வழியில் நிறுத்தி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். செல்வத்தை போலீசார் தேடி வருகிறார்கள். சரக்கு வாகனம் மற்றும் பசுமாட்டை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ள வேல்முருகன் மீது சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.