1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை மறுநாள் 1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
இதற்காக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், துணை சுகாதார மையங்கள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், சில தனியார் ஆஸ்பத்திரிகள், சுங்கச்சாவடி மையங்கள், ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்கள் உள்பட 1,055 இடங்களில் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
1¼ லட்சம் குழந்தைகள்
இதன் மூலம் 1,30,902 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரகவளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 4,400 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
இவர்களுடன் ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்ட பொது நல அமைப்புகளை சேர்ந்தவர் களும் ஈடுபடுகிறார்கள், இது தவிர பஸ் நிலையங்கள், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 25 நடமாடும் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நடமாடும் குழுக்கள்
வேலைக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வந்து தற்காலிகமாக கூடாரங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க 10 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்த போலியோ சொட்டு மருந்து முகாமை பயன்படுத்தி தங்களது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.