காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட தெருநாய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட தெருநாய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
மும்பை,
மும்பை தாதர் அருகே உள்ள நய்காவ் பகுதியில் விஸ்கி என்ற தெரு நாய் இருந்தது. அப்பகுதி பொதுமக்கள் விஸ்கிக்கு உணவுப்பொருட்களை வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி விஸ்கி காணாமல் போய் உள்ளது. இதையடுத்து, விஸ்கியை தேடும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் விஸ்கி காணாமல் போன தகவலை தெரிவித்து கண்டுபிடித்துத் தர உதவுமாறு கோரிக்கை வைத்தனர்.
இதன் காரணமாக சமீபத்தில் தெற்கு மும்பை வில்சன் கல்லூரி அருகே நின்ற விஸ்கியை கண்டுபிடித்து நய்காவ் பகுதிக்கு ஒரு டாக்சியில் அழைத்து வந்தனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள், விஸ்கியை ஆரத்தி எடுத்தும், இனிப்புகளை வழங்கியும், மலர்களை தூவியும் உற்சாகமாக வரவேற்றனர். இது தொடர்பான வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு ஏராளமானோர் லைக் தெரிவித்து தங்கள் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.