சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போலீஸ் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போலீஸ் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சக்தி, மாவட்ட தலைவர் ராணி, பொருளாளர் முருகசாமி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்க வேண்டும். பொது பணிமாறுதல் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். திருப்பூர் மாநகராட்சி சத்துணவு பிரிவு முறைகேடுகளை களைய வேண்டும். அவினாசி ஒன்றிய பிரச்சினையில் நீதி வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டங்களில் பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
அதிகாரி பேச்சுவார்த்தை
திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் அரவிந்த், ரவி, உதவி கமிஷனர்கள் வரதராஜன், லட்சுமணபெருமாள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிவசண்முகம் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சில கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று அதிகாரி கேட்டார்.
பின்னர் முக்கிய நிர்வாகிகளுடன் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்குவதற்கு கல்வி தகுதி அடிப்படையில் வழங்குவதா.? அல்லது 5 ஆண்டு பணி மூப்பு அடிப்படையில் வழங்குவது குறித்து தெளிவுரையை சென்னை சமூக நல இயக்குனரிடம் கேட்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து தெளிவுரை வந்ததும் 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொது பணி மாறுதல் தொடர்பான கருத்துக்களை வருகிற 28-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது.
போராட்டம் ஒத்திவைப்பு
மாநகராட்சியில் சத்துணவு முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசாரணை அலுவலரை நியமித்து 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அறிக்கை வந்ததும் கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அவினாசி ஒன்றியத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதி அளித்ததை தொடர்ந்து உடன்பாடு ஏற்பட்டது.
மாலை 4 மணி அளவில் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.