நாமக்கல்லில், குறைவான எடையில் பிறந்த பச்சிளங் குழந்தைகளை காப்பாற்றிய அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கலெக்டர் ஸ்ரேயா சிங் பாராட்டு
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குறைவான எடையில் பிறந்த 2 பச்சிளங் குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் பாராட்டு தெரிவித்தார்.
நாமக்கல்:
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குறைவான எடையில் பிறந்த 2 பச்சிளங் குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் பாராட்டு தெரிவித்தார்.
இரட்டை குழந்தைகள்
நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்த விக்னேஷ்- சாதனா தம்பதியினருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகள் மிகவும் குறைவான எடை மற்றும் அதீத குறை பிரசவத்தில் பிறந்ததால் அதே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். சுமார் ஒரு மாதமாக சிகிச்சை அளித்தும் குழந்தைகளின் உடல் நிலையில் சரியான முன்னேற்றம் ஏற்படவில்லை. மேலும் பல லட்சம் ரூபாய் செலவு ஆகிவிட்டது. எனவே குழந்தையின் பெற்றோர் குழந்தைகளை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
525 கிராம் எடை
அதன்படி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்த இரட்டை குழந்தைகளை 33 நாட்கள் ஆன நிலையில், பெற்றோர் வெண்டிலேசன் வசதி கொண்ட சிறப்பு அவசர சிகிச்சை ஊர்தி மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஓரிரு நாட்களிலேயே இரட்டை குழந்தைகளில் 720 கிராம் எடை மட்டுமே கொண்ட ஆண் குழந்தை தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து விட்டது. இதனால் பெற்றோர் மட்டுமின்றி டாக்டர்கள் மற்றும் செவிலியர்களும் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.
மருத்துவக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி, குழந்தைகள் துறை தலைவர் சுரேஷ் கண்ணன், பச்சிளம் குழந்தைகள் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலர் டாக்டர் கண்ணன் ஆகியோர் உயிருடன் இருக்கும் மற்றொரு குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற சவாலுடன் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்தனர். 80 நாட்களுக்கும் மேலாக தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் இருந்த பெண் குழந்தை தற்போது 525 கிராமில் இருந்து, ஒரு கிலோவுக்கு மேல் எடை அதிகமாகி ஆரோக்கியத்துடன் உள்ளது. இதனால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறைமாத குழந்தைகள்
இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறியபோது, "இவ்வளவு எடை குறைவான மற்றும் குறைமாத குழந்தைகளை காப்பாற்றுவது கடினமான காரியம். இதுபோன்ற குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நுரையீரல் வளர்ச்சி குறைபாடு, இருதய குறைபாடு, பால் குடிக்க முடியாமல் போதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். இத்தனை சவால்களையும் தாண்டி பெற்றோரின் துணையுடன் குழந்தையை காப்பாற்றி உள்ளோம் என்றனர்.
இதேபோல் பாலக்குறிச்சியை சேர்ந்த ஜீவானந்தம்- சவுந்தர்யா தம்பதியினருக்கு 840 கிராம் எடையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு நுரையீரல் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்ததால், தொடர்ந்து 25 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் தற்போது எடை அதிகரித்து வீடு திரும்பி உள்ளது.
கலெக்டர் பாராட்டு
இந்த இரு பச்சிளங்குழந்தைகளையும் காப்பாற்றிய அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று பாராட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குறை மாதத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. மாநிலத்திலேயே பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சிறப்பாக செயல்படும் அரசு மருத்துவமனையில் நாமக்கல் அரசு மருத்துவமனை சிறப்பிடம் பெற்றுள்ளது. அந்த வகையில் 525 கிராம் எடை கொண்ட குழந்தையை காப்பாற்றியது சாதனைக்குரிய விஷயம் ஆகும். தற்போது இந்த குழந்தை 1 கிலோ 400 கிராம் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.