பெண் போலீஸ் கணவர் உள்பட 2 பேர் தற்கொலை

கம்பம், தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் போலீஸ் கணவர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-02-24 17:06 GMT
கம்பம்: 

கம்பம் உத்தமபுரம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர் அதிவீரன் (வயது 38). இவர் அனுமந்தன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மேனகா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மேனகா கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். சமீபகாலமாக குடும்பத்தில் வரவு-செலவு காரணமாக பிரச்சினை ஏற்பட்டதில் அதிவீரன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்  23-ந்தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதிவீரன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோல் தேவதானப்பட்டி அருகே உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் நவீன் (19). இவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நவீன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்