செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

வேலூர் சைதாப்பேட்டையில் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.;

Update: 2022-02-24 16:47 GMT
வேலூர்

வேலூர் சைதாப்பேட்டையில் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செல்போனில் விளையாட்டு

வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மனைவி உமாமகேஸ்வரி. இவர்களுக்கு பரத்குமார் என்கிற கணேஷ் (வயது 15), விக்னேஷ்குமார் (12) என்று 2 மகன்கள். கணவன்- மனைவியும் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள இனிப்பு கடையில் வேலை பார்த்து வருகின்றனர். பரத்குமார் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

 வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் பரத்குமார் செல்போனில் பல்வேறு விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்து மணிக்கணக்கில் விளையாடி வந்ததாகவும், அதனை பெற்றோர் பலமுறை கண்டித்துள்ளனர். ஆனாலும் பரத்குமார் செல்போனில் விளையாடுவதை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு பரத்குமார் பாடங்கள் படிக்காமல் செல்போனில் விளையாடி கொண்டிருந்தான். அதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் செல்போனை பறித்து தரையில் வீசி எறிந்து உடைத்து, படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுரை கூறி உள்ளார்.

தற்கொலை

தந்தையின் கண்டிப்பு மற்றும் செல்போன் உடைந்ததால் பரத்குமார் மனவேதனையுடன் காணப்பட்டுள்ளான். இந்த நிலையில் நேற்று முன்தினம் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டான். வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்த பெற்றோர் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரத்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் குப்பன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்