823 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
தேனி மாவட்டத்தில் 1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க வருகிற 27-ந்தேதி 823 மையங்களில் முகாம் நடக்கவுள்ளதாக கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.
தேனி:
போலியோ சொட்டு மருந்து
தமிழகத்தில் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடக்கிறது. தேனி மாவட்டத்தில் இந்த முகாம் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசியதாவது:-
தேனி மாவட்டத்தில் வருகிற 27-ந்தேதி 823 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடக்கின்றன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடக்கிறது. 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 2 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நடமாடும் குழுக்கள்
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஊட்டச்சத்து மையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் முகாம்கள் நடக்கிறது. இதற்காக பொது சுகாதாரம், மருத்துவம், ஊட்டச்சத்து துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 3,586 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மலைவாழ் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் பழங்குடியினரின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக 12 நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடிசை பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.