வரப்பு உளுந்து பயிர் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்
கூத்தாநல்லூர் பகுதிகளில் வரப்பு உளுந்து பயிர் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் பகுதிகளில் வரப்பு உளுந்து பயிர் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வரப்பு உளுந்து பயிர் சாகுபடி
கூத்தாநல்லூர் பகுதி டெல்டா பகுதி என்பதால் ஒவ்வொரு ஆண்டும் அந்த பகுதி விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா- தாளடி நெற்பயிர்களை இரண்டு போக சாகுபடியாக செய்து வருகின்றனர். இந்த இரண்டு போக சாகுபடியில் அறுவடை பணிகள் முடிந்த பிறகு, வயல்களில் உளுந்து பயறு சாகுபடியினை காலம் காலமாக செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மழையாலும், கடுமையான வெயில் காலங்களில் போதிய தண்ணீர் இன்றியும் உளுந்து பயறுகள் சேதமடைந்துள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக கூத்தாநல்லூர் பகுதிகளில் வரப்பு உளுந்து பயிர் சாகுபடியினை அந்த பகுதி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் வரப்பு உளுந்து பயிர் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மகசூல் அதிகரிக்க வாய்ப்பு
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
வரப்பு உளுந்து பயிர் மேடான பகுதியில் உள்ள வரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் கடுமையான மழை பெய்யும் காலங்களில் வயலில் அதிகமாக தண்ணீர் தேங்கி நிற்கும். ஆனால் வரப்பு மேடான பகுதியில் தண்ணீர் நிற்பதில்லை. இதனால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. வரப்பு உளுந்து பயிர் சாகுபடியினை மும்முரமாக சாகுபடி செய்து வருகின்றோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் வரப்பு உளுந்து பயிர் சாகுபடியினை செய்து வருவதால், மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.
---