மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறுவதில் ராணிப்பேட்டை மாவட்டம் பின்தங்கி உள்ளது. கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைபெறுவதில் ராணிப்பேட்டை மாவட்டம் பின்தங்கி உள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
நெமிலி
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைபெறுவதில் ராணிப்பேட்டை மாவட்டம் பின்தங்கி உள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில அரசின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் மூலம் மத்திய அரசின் உதவிகளை பெற முடியாமல் உள்ளது. ஆகையால் தற்போது மத்திய அரசின் மூலம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
எனவே அனைத்து மாற்றுத் திறனாளிகளும், ஏற்கனவே விண்ணப்பம் செய்து, உரிய ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டவர்களும், தங்கள் பகுதியில் நடைபெறும் இதுபோன்ற முகாமில் மனு செய்து தங்களுக்கான அடையாள அட்டை பெற்று பயனடையலாம்.
பின்தங்கி உள்ளது
மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதில் நமது மாவட்டம் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே இம்முகாமில் கலந்து கொண்டவர்கள் உங்கள் பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பெறவேண்டியதன் அவசியத்தை எடுத்து கூறி, அவர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், சமூக பாதுகாப்புத்துறை துணை கலெக்டர் மகேஸ்வரி, தாசில்தார் ரவி, நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.