வாணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகியின் வீடு, கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்
வாணியம்பாடியில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகியின் வீடு, கார் மீது மர்மநபர்கள் சரமாரி கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகியின் வீடு, கார் மீது மர்மநபர்கள் சரமாரி கல்வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்வீசி தாக்குதல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜிநகரை அடுத்த உமர்நகர் மசூதி தெருவில் வசித்து வருபவர் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் இக்பால் அஹ்மத். இவருடைய வீட்டின் எதிரே நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் வீடு மீது மர்ம நபர்கள் யாரோ கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அதில் கார் கண்ணாடிகள் மற்றும் வீட்டின் கதவுகள் உடைந்தன.
இதுகுறித்து இக்பால்அஹ்மத் வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியா?
வாணியம்பாடியில் உள்ள நேதாஜிநகர், காதர்பேட்டை, நியூடெல்லி, பெருமாள்பேட்டை, பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாராயம், கஞ்சா, போலி மது ஆகியவை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை, தட்டிக் கேட்பவர்களின் வீடுகள் மீது தாக்குதல் சம்பவம் நடத்தப்படுகிறது.
மேற்கண்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்டதால் மர்ம கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதலா? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்ட தாக்குதலா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.