மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்த வனத்துறையினர்

கன்னிவாடி அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் ஊர்ந்து சென்றதால் சந்தேகம் அடைந்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர்.

Update: 2022-02-24 15:48 GMT
கன்னிவாடி:
 
 வனத்துறையினர் ரோந்து

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை அடுத்த பண்ணப்பட்டி அருகே பெரியகோம்பை மலைக்கிராமம் உள்ளது. இது குடியிருப்பு எதுவும் இல்லாத அடர்ந்த வனப்பகுதி ஆகும். இங்கு மான், கேளையாடு, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. 

இந்தநிலையில் கன்னிவாடி வனச்சரகர் சக்திவேல் தலைமையில், வனவர்கள் அறிவழகன், வெற்றிவேல் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பெரியகோம்பை வனப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 ஊர்ந்து சென்ற சிறுத்தை

அப்போது ஆட்களே நுழைய முடியாத அளவுக்கு அடர்ந்து படர்ந்திருந்த புதருக்குள் சிறுத்தை ஒன்று ஊர்ந்து சென்றதை வனத்துறையினர் பார்த்தனர். கம்பீரமாக நடக்கக்கூடிய சிறுத்தை, ஊர்ந்து சென்றதால் காலில் ஏதேனும் காயம் ஏற்பட்டிருக்குமோ? என்று அவர்கள் சந்தேகம் அடைந்தனர்.

இதனையடுத்து அந்த சிறுத்தையை பிடித்து அதற்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இது தொடர்பாக கால்நடை மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் டாக்டர்கள் சதீஷ், சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சூம்பி போன கால் 

பின்னர் கால்நடை மருத்துவ குழுவினரின் ஆலோசனையின் பேரில், புதருக்குள் பதுங்கி இருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி ெசலுத்தப்பட்டது. ஊசி செலுத்திய 10 நிமிடத்தில் அது மயக்கம் அடைந்தது. 

இதனை உறுதி செய்த வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தான், அந்த சிறுத்தையின் காலில் காயம் எதுவும் இல்லை என்று தெரியவந்தது. ஆனால் சிறுத்தையின் பின்பக்க கால் ஒன்று சூம்பி போய் இருந்தது. 

இதனால் தான் அந்த சிறுத்தை நடக்க முடியாமல் ஊர்ந்து சென்றிருக்கிறது. எனவே சூம்பிய காலுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

 கூண்டுக்குள் அடைப்பு

இதனையடுத்து மயக்கம் அடைந்த சிறுத்தையை ராட்சத கூண்டுக்குள் வனத்துறையினர் அடைத்தனர். பின்னர் அந்த சிறுத்தை கூண்டோடு லாரியில் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக, திருப்பூர் மாவட்டம் அமராவதிபுதூரில் உள்ள புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கால் குணமானவுடன், அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தை விடப்படும் என்று வனத்துறையினர் கூறினர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 
பெரியகோம்பை வனப்பகுதியில் மொத்தம் 63 சிறுத்தைகள் உள்ளன. தற்போது பிடிபட்ட சிறுத்தைக்கு 4 வயது இருக்கும். இது, ஆண் சிறுத்தை ஆகும். சிறுத்தையின் பின்னங்கால் சூம்பி போய் இருந்ததற்கு, ஏற்கனவே காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதினோம். ஆனால் அதுபோன்று காயத்தினால் சிறுத்தையின் கால் பாதிக்கப்படவில்லை.

நோய் பாதிப்பு

மனிதர்களுக்கு ஏற்படுகிற போலியோ, பக்கவாத நோயை போல் இந்த சிறுத்தையும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் சிறுத்தைக்கு, ஒரு சிறுத்தை தான் இதுபோல நோயால் பாதிக்கப்படும். 

பிடிபட்ட சிறுத்தைக்கு, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். உணவு ஒவ்வாமையினாலும், இதுபோன்று காலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் வைத்து ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் சிகிச்சை அளித்தால் சிறுத்தையின் காலை சரி செய்து விடலாம். கால் குணமானவுடன், கேமரா பொருத்தப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தை விடப்படும். 

30 நாட்கள் கண்காணிப்பு

வனப்பகுதியில் சிறுத்தை எவ்வாறு நடக்கிறது என்பது 30 நாட்களுக்கு கண்காணிக்கப்படும். வனப்பகுதிக்கு சென்ற பிறகு சிறுத்தையால் நடக்க முடியவில்லை என்றால், அதனை பிடித்து மீண்டும் சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். 

இதற்கிடையே தலைமை வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு ஆகியோர் பெரிய கோம்பைக்கு வந்து வனத்துறையினரிடம் விசாரணை நடத்தினர்.
பெரியகோம்பை வனப்பகுதியில் சிறுத்தை சிக்கிய சம்பவம் கன்னிவாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்