கோத்தகிரி அருகே கோலாகலமாக நடந்த மாகாளியம்மன் கோவில் பண்டிகை

கோத்தகிரி அருகே மாகாளியம்மன் கோவில் பண்டிகை கோலாகலமாக நடந்தது. இதில் கிராம மக்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.

Update: 2022-02-24 15:33 GMT
கோத்தகிரி

கோத்தகிரி அருகே மாகாளியம்மன் கோவில் பண்டிகை கோலாகலமாக நடந்தது. இதில் கிராம மக்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். 

மாகாளியம்மன் கோவில்

கோத்தகிரி அருகே உள்ள திம்பட்டி கிராமத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த கோவில் பண்டிகை கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதையொட்டி இந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு அம்மன் திருவீதி உலாவாக கொண்டு செல்லப்பட்டது. 

தொடர்ந்து 22-ந் தேதி அளியூர் கிராமத்துக்கும், 23-ந் தேதி சாமில்திட்டு, கப்பட்டி கிராமத்திற்கும் சாமி திருவீதி உலாவாக கொண்டுச் செல்லப்பட்டு அந்த கிராமங்களில் பண்டிகை கொண்டாடப்பட்டது. நேற்று கடைகம் பட்டி கிராமத்தில் அம்மன் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. 

பாரம்பரிய நடனம்

இதில் கலந்து கொண்ட கிராம மக்கள் அனைவரும், அம்மனை வழிபட்டு தங்களது பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். நேற்று மாலை சாமி ஊர்வலம் நாரகிரி கிராமத்திற்கும், இரவு குன்னியட்டி கிராமத்திற்கும் சென்றது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கெச்சிகட்டி கிராமத்தில் பண்டிகை நடைபெறுகிறது. 

நாளை (சனிக்கிழமை) காலை ஜக்கலோடை மற்றும் கெச்சிகட்டி கிராமத்திலும், இரவு கன்னேரிமுக்கு கிராமத்திலும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு கடக்கோடு கிராமத்திலும் அம்மன் ஊர்வலம் நடைபெறவுள்ளது.

கரக ஊர்வலம்

வருகிற 28-ந் தேதி இரவு திம்பட்டி கிராமத்தில் பண்டிகை நடைபெறுகிறது. தொடர்ந்து 1-ந் தேதி அம்மன் கரக ஊர்வலம் கீழ் அனையட்டி, மேல் அனையட்டி வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைகிறது. 

இந்த பண்டிகையையொட்டி திம்பட்டி சுற்று வட்டார படுகர் இன மக்களின் கிராமங்கள் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. 

மேலும் செய்திகள்