ஈரோடு மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 14 வளர்ச்சி திட்ட பணிகள்

ஈரோடு மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 14 வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Update: 2022-02-24 15:14 GMT
ஈரோடு மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 14 வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
சிறு பாலங்கள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் மலை கிராமங்களில் ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி 8 சாலைப்பணிகள் 12½ கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.2 கோடியே 88 லட்சத்து 1,000 மதிப்பீட்டிலும், 2 சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் ரூ.68 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பர்கூர் கத்திரிபட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு முடிய ரூ.49 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டிலும், கத்திரிபட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு முடிய ரூ.48 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பீட்டிலும், பாலபந்தனூர் சாலை முதல் பெஜலட்டி வரை ரூ.25 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டிலும், கெப்பக்காடு சாலை முதல் பெஜலட்டி வரை ரூ.36 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டிலும், கோவில்நத்தம் மின் கம்பம் முதல் அக்னிபாவி கொங்காடை வரை ரூ.32 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டிலும், பெஜிலிபாளையம் திக்கையூர் ரோடு வரை ரூ.4 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டிலும் ஓரடுக்கு கப்பிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இணைப்புச்சாலை
தேவர்மலை வழியாக தாமரைக்கரை முதல் மடம் வரை ரூ.34 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பீட்டிலும், ஈரட்டி வழியாக தாமரைக்கரை முதல் மடம் வரை ரூ.34 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டிலும் சிறு பாலம் அமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், அம்மாபேட்டை அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் ஊராட்சியில் 3½ கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.66 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் மலைப்பகுதி கிராமங்களை இணைக்கும் இணைப்புச்சாலை பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குரும்பானூர் சாலை முதல் வன எல்லை வரை ரூ.66 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பிச்சாலை அமைத்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னிமலை அருகே உள்ள புஞ்சை பாலத்தொழுவு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒரு மீட்டர் நீளத்தில் ஒரு ஊரக இணைப்புச்சாலை ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.
14 வளர்ச்சி திட்ட பணிகள்
ஊத்துக்குளி சாலை முதல் வசந்தம் நகர் சாலை வரை ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பி சாலை அமைத்தல் பணியும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பவானி அருகே உள்ள மைலம்பாடி பகுதியில் ஒரு கிலோ மீட்டர் நீளத்தில் ஊரக இணைப்புச்சாலை அமைக்கும் பணியானது ரூ.49 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்ட உள்ளது.
மைலம்பாடி வெள்ளித்திருப்பூர் சாலை முதல் கரட்டுவலசு சாலை வரை ரூ.49 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் ஊரக இணைப்புச்சாலை அமைக்கும் பணியும், பர்கூர் ஒன்னக்கரை முதல் முத்தூர் வனச்சாலை வரை ரூ.41 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் ஊரக இணைப்புச்சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தியூர், அம்மாபேட்டை, சென்னிமலை மற்றும் பவானி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.4 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 14 வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்