கேரளாவுக்கு கூடுதலாக தண்ணீர் வழங்க கூடாது

கேரளாவுக்கு கூடுதலாக தண்ணீர் வழங்க கூடாது என்று ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-02-24 14:37 GMT
பொள்ளாச்சி

கேரளாவுக்கு கூடுதலாக தண்ணீர் வழங்க கூடாது என்று ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளனர்.

விவசாயிகள் மனு

ஆனைமலை வட்டார(பி.ஏ.பி.) ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மழை இல்லாததால் ஆழியாறு அணையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. தற்போது வரை ஆழியாறு புதிய ஆயக்கட்டுக்கு வழங்கப்பட்டு உள்ள தண்ணீரையும், மேலும் கேரள பங்களிப்பு நீர் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு வழங்கப்படும் நீரையும் பரம்பிக்குளம் தொகுப்பு அணைகளில் இருந்து உடனடியாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரளாவிற்கு இருமாநில ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய நீரை விட பல மடங்கு கூடுதலாக நீர் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதை உடனடியாக சரிசெய்து அடுத்த பருவத்திற்கு அணையின் நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக கேரளாவிற்கு ஒப்பந்தபடியான நீர் அளவுகளின்படி வழங்கப்பட்டு வந்தது.

முதல் போகம்

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக அணைக்கு நீர்வரத்து இல்லாத ஜனவரி முதல் மே வரையிலான காலத்தில் ஆழியாறு அணையின் தொகுப்பு விதிகளின்படி குறிப்பிடப்பட்டு உள்ள அளவுகளை விட பல மடங்கு கூடுதல் தண்ணீர் வழங்கப்படுகிறது. 

இதனால் ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயம் பருவம் தவறி நடைபெறுவதால் கடுமையான பாதிக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக அபரிவிதமான மழைப்பொழிவு இருந்தும் அணைக்கு சராசரிக்கு மிகவும் கூடுதலாக நீர் கிடைக்க பெற்றும் முதல் போகத்திற்கு போதிய நீர் இருப்பு பராமரிக்கப்படுவதில்லை.இதனால் இந்த அணையை நம்பி உள்ள பழைய ஆயக்கட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த ஆண்டு நீர் இருப்பை சரியாக பராமரித்து வருகிற மே மாதம் 15-ந்தேதியில் இருந்து முதல் போகத்திற்கு தண்ணீர் திறப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்