கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
செய்துங்கநல்லூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்;
ஸ்ரீவைகுண்டம்:
செய்துங்கநல்லூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் ரோந்து
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செய்துங்கநல்லூர் அருகே உள்ள கால்வாய் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த நெல்லை கீழபாலமடை மூக்காண்டி மகன் பகவதிராஜா (வயது 21), நெல்லை டவுண் குமார் பாண்டியன் மகன் சுந்தர் (23) ஆகியோரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பகவதி ராஜா மீது நெல்லை மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 5 வழக்குகளும், சுந்தர் மீது வி.கே. புரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.